அம்பிகையின் திருக்கோல த்யானம்:
- E Hariharasivam
- Mar 28, 2022
- 1 min read
Updated: Apr 7, 2022

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்.
மனிதன் எந்த ஒரு சாதனை செய்வதானாலும், அதற்கு மன ஒருமைப்பாடுமிகவும் அவசியம். எந்த முயற்சியையும் இடைவிடாமல் ஊக்கத்துடன் செய்தால் தான் நல்ல பயன் உண்டாகும். இறைவியினுடைய திருவருளைப் பெறும் முயற்சியிலும் இடைவிடாது மன ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அவளுடைய திரு உருவத்தைத்யானிக்கும் பொழுதும் ஒரே குறிப்பாக இருந்து பழக வேண்டும்.
தெய்வம் ஒன்றே. இயல்பாக கடவுளுக்கு பெயரோ உருவமோ கிடையாது, ஆனால் நாமரூபம் இல்லாத பொருளை மனம்பற்றாது என்பதால் மனம் உடையமனிதர்கள் தன்னை த்யானிக்க வேண்டும் என்று கருணை கொண்டு, இறைவன் பல்வேறு உருவங்களை எடுத்துவருகிறான்..
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது
அம்பிகையிடம் பக்தி செய்யும் உபாசகன், அகத்திலே த்யானிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட திருஉருவத்தையே இடைவிடாமல் த்யானித்துப் பழகவேண்டும். எம்பெருமாட்டியின் திருக்கோலங்கள் பல இருப்பினும், அவற்றுள்எந்தக்கோலம் நம்உள்ளத்தில் உணர்ச்சியும் கிளர்ச்சியும் ஏற்படுத்துகிறதோ, அதைப்பற்றிக்கொள்ளவேண்டும். அபிராமபட்டர் அவ்வாறு அபிராமியின் திருஉருவத்தையே எப்பொழுதும் த்யானிப்பவர். வேறுகோலத்தை நினைப்பதில்லை. இதனால்மற்ற கோலங்களைக்கண்டு வெறுப்பதில்லை. எப்படி ஒரு சிறுகுழந்தை அனைவரிடமும் சென்று தவழ்ந்து, கொஞ்சி அணைத்து விளையாடினாலும், பசிவரும் பொழுது தன்தாயை அன்றிவேறு யாரையும்பற்றிப் பயன்இல்லை என்றறிந்து, தன்தாயை மட்டுமே நாடுமோ, அப்படித்தான் உண்மையான உபாசகனும் இருப்பான்.
அபிராம பட்டர்,அம்பிகையை அனைத்து கோலங்களிலும் வழிபட்டாலும், அபிராமவல்லியின் திரு உருவக்கோலத்தையே த்யானிப்பதற்குரிய பொருளாகக் கொண்டு, அம்பிகையின் திவ்யமான காட்சியைகாணும் பேறுபெற்றார். எனவே, ”கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது” என்றார்.

அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்:
இவ்வாறு அம்பிகையிடம் பக்தி பண்ணி சாதனம் செய்யும் காலத்தில், அது குலையும் வகையில் பல இடைஞ்சல்கள் ஏற்படலாம். அதனால் மனம் தளராது,பக்தி மாறாது இருக்கவேண்டுமானால், தக்க பாதுகாப்பு வேண்டும். அடியார்களுடைய பழக்கம் அந்த பாதுகாப்பு தரும்.
எப்படி உறவினர் கூட்டத்தை விட்டு விலகாத குழந்தை தன் வீட்டை விட்டு வெளியேறவும் அஞ்சுமோ, அப்படியை அம்பிகையை உபாசனை செய்து த்யானிக்கும் பக்தன், அம்பிகையின் அடியார்களுடன் உறவாடி அவர்களை விட்டு நீங்காது, அவர்களுள் ஒருவராகக் கலந்து இருப்பான்.
எனவே, அபிராம பட்டர், ”அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்” என்றார்.
இவ்வாறு, நாமும் நம் ஸத்குருவின் பாதாரவிந்தத்தில் சரணடைந்து, நம் கஷ்டங்களிலிருந்து நம்மைக் காத்தருளி,சகல சௌபாக்யங்களையும் நமக்கு அள்ளிக்கொடுக்கும், கருணாகடாக்ஷி “ஶ்ரீ ஆனந்தவல்லியை” த்யானித்து, அவளுடைய அன்பர் கூட்டத்தில் ஒருவராய் கலந்து, பெறும் பேறு பெறுவோம்.

“ஸ்ரீ ஆனந்தவல்லி பாஹிமாம்,
ஸ்ரீ ஆனந்தவல்லி ரக்ஷமாம்”
(தொடரும்)
Comments