ஸ்ரீ சிவா
- E Hariharasivam

- Dec 24, 2018
- 1 min read

பரமேசுவரனையே மறுபடியும் பதியாக அடைய வேண்டும் என்று சின்னஞ்சிறு வயதிலேயே உக்கிர தபஸ் செய்தாள் பார்வதி. கடைசியில் ஈசுவரனைக் கல்யாணமும் செய்து கொண்டாள். இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட விசேஷத்தால், ‘கோர கோர தரேப்ய:’ என்று வேதம் சொல்கிற கோரருத்திரனும், பரம மங்கள ஸ்வரூபியாக, சிவமாக ஆனார். அவளுக்கும் ‘சிவா’ என்ற பேர் உண்டாயிற்று.
ஈசுவரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.
வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது:
“பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக (மருந்தாக) இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.”

ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். “அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?” என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கேட்கிறார்.
அப்படிப்பட்ட சிவாவோடு சேர்த்து, ஸாம்ப பரமேசுவரனை (ஸ + அம்ப = ஸாம்ப; அம்பளோடு கூடியவனாக) தியானிக்க வேண்டும். சாம்பமூர்த்தி, சாம்பசிவன் என்று அம்பாளோடு சேர்த்துச் சேர்த்தே ஈசுவரனைச் சொல்கிறது வழக்கம்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தின் இறுதியில் அம்பாளை “ஸ்ரீ சிவா” என்ற திருநாமம் கொண்டே போற்றப்படுகிறது.




Comments